சொத்துகள் தொடர்பான வில்லங்க சான்றிதழை, அரசின், இ – சேவை மையங்களில் இனி பெறலாம்’ என, தமிழ்நாடு மின்னாளுமை முகமை தெரிவித்துள்ளது. மத்திய – மாநில அரசுகளின் சேவைகளை பெற, டி.என்.இ.ஜி.ஏ., என்ற, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் வழியாக, அரசு, ‘இ – சேவை’ மையத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசு, இ – சேவை மையத்தில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், வண்ண வாக்காளர் அட்டை அச்சிடுதல் உட்பட, 207 சேவைகள், தற்போது வழங்கப்படுகின்றன. கூடுதலாக, நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ் பெறும் சேவை, இணைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, டி.என்.இ.ஜி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: அரசின், இ – சேவை மையங்களில், தற்போது, மத்திய – மாநில அரசுகளின் ஏராளமான சேவைகள் வழங்கப்படுகின்றன. பத்திரப்பதிவு துறையில், ஆன்லைன் சேவை துவங்கிய நிலையில், சொத்துகள் தொடர்பான வில்லங்க சான்றிதழ்கள், இ – சேவை மையங்களிலும் பெற வழி வகை செய்யப்பட்டு வருகிறது. விரைவில், இந்த சேவை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.