தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 13) சில இடங்களிலும், வரும் 14, 15, 16-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவையொட்டி இருக்கும்.
ஜூன் 13-ம் தேதி (நேற்று) காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 3 செ.மீ. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, நீலகிரி மாவட்டம் கெட்டி, சென்னை மாதவரம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.