தமிழகத்தில் ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 18, 19-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 18-ம்தேதி (இன்று) சில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகமாக இருக்கக்கூடும்.
தென் இந்தியப் பகுதிகளின் மேல்வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில்கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதிநிலவக்கூடும். இதன் காரணமாக ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.
ஏப்ரல் 17-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது.