தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு – மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24, 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 80 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் உதகையில் 7 செ.மீ., கீழ் கோத்தகிரி எஸ்டேட்டில் 5 செ.மீ., கெட்டி, பந்தலூர், கோடநாடு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.