crackers-4112015தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சீனப்பட்டாசுகள் விற்பனைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று தனிப்படைகள் நடத்திய திடீர் சோதனையில் சென்னை வடபழநியில் உள்ள கடைகளில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீனப்பட்டாசுகள் என சந்தேகிக்கபடும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்து, விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனப் பட்டாசு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் 36 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் சீனப் பட்டாசு விற்பனையைத் தடுப்பதற்காக பட்டாசு கடைகள், பட்டாசு கிட்டங்கிகள், பட்டாசு மொத்த விற்பனை மையங்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படையினர் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் நேற்று சோதனை நடத்தினர். சீனப் பட்டாசுகள் போன்று எழுத்துகளுடனும், படங்களுடனும் பட்டாசுகள் இருந்தனவாம். அந்த பட்டாசுகளை உடனே தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள், சீனாவில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டதா? என தனிப்படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளிலும் தனிப்படையினர் திடீர் சோதனை செய்தனர். இச் சோதனையில் அங்கு சீனா பட்டாசு போன்று சந்தேகத்துக்குரிய சில பட்டாசுகள் இருந்தன. அந்த பட்டாசுகள் குறித்து அதிகாரிகள், வியாபாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு வியாபாரிகள், அந்த பட்டாசுகள் சிவகாசியில் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களையும், அந்த பட்டாசு சிவகாசியில் தயாரிக்கப்பட்டதற்கான சான்றுகளையும் காட்டினர். இந்தச் சம்பவத்தால் தீவுத்திடல் பகுதியில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் விலை மலிவாக இருந்தாலும் பாதுகாப்புத்தன்மை இல்லாமல் இருப்பதால் இந்த பட்டாசுகள் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-Officials checking a licensed firecracker shop in chennai for Vigil against sale of Chinese cracker.