fire-dept-4112015தீபாவளி தினத்தில் பொதுமக்கள் ஆர்வமாக பட்டாசு மற்றும் மத்தாப்புகளை வெடித்து கொண்டிருக்கும்போது கவனக்குறைவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டால் அதை தடுப்பதற்காக சென்னையில் தீயணைப்புத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 38 தீயணைப்பு நிலையங்கள் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக 34 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அதிகமான அளவில் தீ விபத்துகள் நடந்த 34 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் இந்த புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் புற தீயணைப்பு நிலையங்களில் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 24 மணி நேரமும் 15 தீயணைப்பு வீரர்கள் பணியில் இருப்பார்கள். இந்தத் தீயணைப்பு நிலையங்கள் நவம்பர் 8-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இது தவிர சிறியதாக ஏற்படும் தீயை அணைக்கவும், பெரிய தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று அணைக்கவும் ஜீப் வடிவிலான 8 தீயணைப்பு வாகனங்களும், 8 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

தீயை அணைப்பதற்கு தண்ணீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ நிறுவனத்திடமிருந்து 50 தண்ணீர் லாரிகள் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த வாகனங்கள் தலா 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டவை ஆகும். சென்னையில் சுமார் ஆயிரம் தீயணைப்புப் படை வீரர்கள் பணியில் இருக்கும் நிலையில் கூடுதலாக 20 ஓட்டுநர்கள் உள்பட 200 தீயணைப்புப் படை வீரர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றனர்.

தீபாவளியன்று தீ விபத்து ஏற்படும் இடங்களுக்கு 10 நிமிடங்களுக்குள் செல்வதற்கு தீயணைப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குநர் எஸ்.விஜயசேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘பட்டாசுகளினால் ஏற்படும் தீ விபத்து குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்தை 10 நிமிஷங்களுக்குள் செல்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு ஏற்றாற்போல புற தீயணைப்பு நிலையங்கள் நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த இலக்கை எட்டினால், தீ விபத்தினால் ஏற்படும் பெருமளவு சேதம் குறையும் என்றார் அவர்.
English summary-new fire stations in chennai to prevent fire accidents for diwali.