ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த புத்தக கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏராளமான புத்தகங்களை பார்வைக்கும் விற்பனைக்கும் வைப்பது வழக்கம். மற்ற நகரங்களை விட சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வரும் ஜனவரியில் நடத்த திட்டமிட்டிருந்த புத்தகக் கண்காட்சி ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புத்தக சங்கத்தின் பொருளாளர் ஒளிவண்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மழை- வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து சென்னை மக்களும், பதிப்பாளர்களும் இன்னும் மீளவில்லை. இந்த நேரத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்துவது சரியாக இருக்காது.
கண்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஜனவரியில் நடைபெற இருந்த புத்தகக் கண்காட்சி ஏப்ரலுக்கு தள்ளி வைப்பது என சங்கத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு உறுதி செய்யப்படும்.
மழை-வெள்ளத்தில் பதிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதால், வரும் புத்தகக் கண்காட்சியில் சலுகை விலையில் மின்சாரம், குறைந்த வாடகையில் இடம் போன்ற சலுகைகளை அரசு அளிக்க வேண்டும்
இவ்வாறு ஒளிவண்ணன் கூறியுள்ளார்.
English summary-Chennai book fair postponed to April 2016 due to recent flood