சென்னை – கோவை இடையிலான தமிழகத்தின் 2-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் இருந்து அதிகாலை 5.42 மணிக்கு ரயில் புறப்பட்டு காலை 11.18 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. சுமார் 5 மணி நேரம் 35 நிமிடங்களில் கோவை ரயில் நிலையத்தை அடைந்தது. இந்த ரயிலில் சேலம் கோட்ட மேலாளர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பயணித்து பரிசோதனை செய்தனர்.
முதற்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 536 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பெட்டிகள் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன.
வந்தே பாரத் ரயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும் என்றாலும், சோதனை ஓட்டத்திற்காக 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்கப்பட்டது. சில ரயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.