சென்னை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூல்செய்யப்பட்டுள்ளது. 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30 வரையிலும், 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.

மேலும், முதல் அரையாண்டு சொத்துவரியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள்ளாகவும், 2-ம் அரையாண்டு சொத்துவரியை அக்.30-ம் தேதிக்குள்ளாகவும் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கான முக்கிய வருவாய் இனங்களில் சொத்துவரி பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிதியாண்டில் இதுவரை வசூலிக்கப்பட்ட சொத்துவரி ரூ.769 கோடி ஆகும். இவற்றில் ரூ.321 கோடி இணையதளம் மூலமாக 4 லட்சத்து 77 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

சொத்து வரியை பொதுமக்கள் எளிதாக செலுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, மாநகராட்சியின் சார்பில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் நினைவூட்டல் மற்றும் பணம் செலுத்துவதற்கான இணையதள இணைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் GCCCRP, GCCPTX, GCCREV, GCCCOV, GCCGEN, GCCTRD, GCCPGR, GCCCER, GCCSER, CHNCRP என்ற முகவரியிலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறான குறியீட்டிலிருந்து அனுப்பப்படும் குறுந்தகவல் சேவையுடன் இணைத்து அனுப்பப்படும் இணைப்பின் வழியாகச் சொத்து உரிமையாளர்கள் எவ்வித தயக்கமுமின்றி சொத்துவரியைச் செலுத்தலாம்.

மேலும், வரி வசூலிப்பாளர்களின் மூலமாக, பிஓஎஸ் கையடக்கக் கருவி உதவியுடன், கடன் மற்றும் பற்று அட்டைகள் (Credit and Debit) மூலமாகச் செலுத்தலாம். மண்டலம்அல்லது வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும் செலுத்தலாம்.

மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள குறிப்பிட்ட வங்கிகளில், நேரடியாக பணமாகச் செலுத்தலாம். ‘நம்மசென்னை’, பேடிஎம் செயலிகளிலும் செலுத்தலாம். மாநகராட்சியின் இணையதளம் www.chennaicorporation.gov.in வாயிலாக, இணைய வழியாகவும், சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூஆர் கோடு உதவியுடனும் சொத்துவரி செலுத்தலாம்.

எனவே, சொத்து உரிமையாளர்கள் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.30-ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *