பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (05.10.2023) முதல் தேர்வு மையங்களிலேயே வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாவது:

நடைபெற்ற ஜூன், ஜூலை 2023 இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (மறுகூட்டல் / மறுமதிப்பீடு உட்பட), தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 05.10.2023 ( வியாழக்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

10ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் முறை:

நிரந்தர பதிவெண் கொண்டு 10ம் வகுப்பு தேர்வெழுதிய தேர்வர்கள் , இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை ஜூன் /, ஜூலை 2023 துணைத் தேர்வில் தேர்வெழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேல்நிலை 2ம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை:

புதிய நடைமுறையில் (மொத்தம் 600 மதிப்பெண்கள்) தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் வழங்கும் முறை:

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை முதலாம் ஆண்டு (60௦ மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கான(6௦௦ மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும்.

மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விலோ / இரண்டாம் ஆண்டு தேர்விலோ அல்லது இரண்டு தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக (Statement Of Marks) வழங்கப்படும். இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பழைய நடைமுறையில் ( மொத்தம் 1200 மதிப்பெண்கள்) +2 தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை:

பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் (Register Number) கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, ஜூன் / ஜூலை 2023 துணைத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது ஜூன் , ஜூலை 2023 துணைத் தேர்வெழுதி இருப்பின், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *