சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அரசின் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் கலை பண்புகளை மேம்படுத்தும் நோக்கிலும், கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் ஆட்சியர் தலைமையில் மாவட்ட கலை மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டக் கலைமன்றங்கள் வாயிலாக அரசின் நல உதவிகள் பெறுதல், அரசு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களைத் தேர்வு செய்தல், கலைஞர்கள் பயணச் சலுகை பெறுதல் போன்ற பயன்களை பெற ஏதுவாக அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகக் கலைஞர்கள், நாகசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, அரசன், அரசி ஆட்டம், தெருக்கூத்து ஆகிய கலைகள் உள்ளிட்ட கிராமியக் கலைகளைத் தொழிலாக கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
“நிர்வாக அலுவலர், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம், கலை பண்பாட்டு வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை – 600008′ என்ற முகவரியில் அணுகி விண்ணப்பங்கள் பெற்று கலைஞர் என்பதற்கான சான்றுகள், இருப்பிடச் சான்று, புகைப்படம் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.