voters listவரும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் நடத்தும் ஆணையருமான விக்ரம் கபூர் வெளியிட்டார்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள், சென்னை மாவட்டத்தின் 7 மண்டலங்களைச் சேர்ந்த 16 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஒட்டப்படவுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது பெயர், குடும்பத்தினர் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றும் அதேபோல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க படிவம் 7ஐயும், பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8ஐயும் பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் இடம்பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏ தகுந்த ஆவணங்களுடன் வாக்காளர் பதிவு அலுவலர், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் செப். 15-ஆம் தேதி முதல் அக். 14-ஆம் தேதி வரை வழங்கலாம். மேலும் செப். 20, அக்.4 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்கலாம். இதுதவிர www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

English Summary:Chennai District Draft Voters List Release.