metroசென்னை மக்களின் கனவு திட்டங்களின் ஒன்றான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சேவை சென்னை மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சென்னை மக்களை மட்டுமின்றி திரையுலகினர்களையும் இந்த மெட்ரோ ரயில் கவர்ந்துள்ளது. மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலை மாறி தற்போது சென்னையிலேயே மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பல இயக்குனர்கள் தங்கள் படத்தின் முக்கிய காட்சிகளை மெட்ரோ ரயிலில், ரயில் நிலையங்களில் படமாக்க மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த இதுவரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படாத நிலையில் தற்போது மெட்ரோ ரயில் அல்லது ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பொதுவாக, ரெயில்களில் நாள் வாடகைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மெட்ரோ ரெயில்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த கட்டணம் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு பின்னர் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில், பீக் அவர் என்று சொல்லப்படும் பிசியான நேரங்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது.

மேலும், கூட்டம் அதிகம் இல்லாத அதிகாலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதிக நேரத்திற்கு மெட்ரோ ரெயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரெயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள இயக்குனர்களும் சென்னை மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

English Summary:Chennai Metro Rail fixing the fee for filming.