University_of_Madras_Newகல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூகமாக தீர்வு காணும் வகையில் வளாக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதியஅமைப்பை சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் மாணவர்களின் நியாயமான குறைகள் மற்றும் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னை பல்கலைக்கழக தொல்காப்பியர் வளாகத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த பல்கலைக்கழகத்தின் பரிதிமாற் கலைஞர் வளாகம் (மெரீனா), மறைமலை அடிகள் வளாகம் (கிண்டி), சேக்கிழார் வளாகம் (தரமணி) ஆகியவைகளுக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், பொது நிர்வாகத் துறை (பொறுப்பு) தலைவராக இருந்த பேராசிரியர் ராமு மணிவண்ணன் நீக்கப்பட்டு, புதிய துறைத் தலைவராக பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, அந்தத் துறை மாணவர்கள் பத்து நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் பல்கலைக்கழக அனைத்து ஊழியர் ஆலோசனைக் கூட்டத்தை பல்கலைக்கழகம் நேற்று முன் தினம் கூட்டியது. இந்த கூட்டத்தில் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்துக்குத் தீர்வு காணும் வகையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழு மாணவர்களுடன் பேச்சு நடத்தி உண்மை நிலையைப் புரியவைத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஒருமனதாக ஊழியர்கள் வலியுறுத்தினர்.

இந்த முடிவின் காரணமாக இந்தப் பிரச்னைக்கு மட்டுமின்றி, வரும் காலங்களில் ஏற்படும் மாணவர்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் நிரந்தர வளாகக் குழுக்களை அமைப்பதற்கு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியபோது: பல்கலைக்கழக்தில் மாணவர்களுக்கான பிரச்னைகள் அவ்வப்போது எழுகின்றன. பல்வேறு நிர்வாகப் பணிகள் காரணமாக, இதுபோன்ற பிரச்னைகளில் துணைவேந்தராலோ, பதிவாளராலோ முழுக் கவனம் செலுத்த முடியாத நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற மாணவர் பிரச்னைகள், போராட்டங்களுக்குத் தீர்வு காணும் வகையில் அந்தந்த வளாக இயக்குநர்கள் தலைமையில் வளாக ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, தொல்காப்பியர் வளாகத்துக்கு வளாக இயக்குநர் டேவிட் அம்புரோஸ் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் இடம்பெற்றிருப்பர். இந்தக் குழு, பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் அறிவியல், பொது நிர்வாகத் துறை மாணவர்களுடன் வியாழக்கிழமை பேச்சு நடத்தியது. மேலும் சம்பந்தப்பட்ட பேராசிரியரிடமும் குழு பேச்சு நடத்தியுள்ளது. எனவே போராட்டம் முடிவுக்கு வந்துவிடும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் மாணவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதோடு, தானாக முன்வந்து மாணவர்களின் தேவையை அறிந்து நிவர்த்தி செய்யும் வகையிலும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பிற வளாகங்களுக்கும் இதுபோன்ற ஒருங்கிணைப்புக் குழுக்கள் அந்தந்த வளாக இயக்குநர்களின் தலைமையில் அமைக்கப்படும் என்றார்.

English Summary:The Permanent Committee to resolve the problems of the students in the University of Madras.