metrowater

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை மிக அதிக அளவில் பெய்ததன் காரணமாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகவும், தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை குறைந்திருப்பதாகவும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் மக்கள் தொடர்பு மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் 145 தெரிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கிணறுகளில் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்ட அளவு மற்றும் நீரில் உள்ள உப்புத்தன்மையின் அளவுகளை கண்காணித்து வருகிறது.

சமீப காலத்தில் வட கிழக்கு பருவமழைக்கு பின்னர் நிலத்தடி நீர்மட்டம் 2.10 மீட்டர் முதல் 10.5 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.

குறிப்பாக புழல், பாரிஸ் கார்னர், அம்பத்தூர் (பாலாஜிநகர்), அயனாவரம், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, கோயம்பேடு, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 5 மீட்டர் வரை உயர்ந்து இருக்கிறது.

இதுபோல் மற்ற பகுதிகளில் 2 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சென்னை நகரில் நிலத்தடி நீர்மட்ட அளவுகள் விவரம் மீட்டரில் வருமாறு:– (அடைப்புக்குள் பழைய நீர்மட்டம்)

புழல் – 6.10 (0.10), திருவொற்றியூர் – 7.75 (4.20), தண்டையார்பேட்டை – 6.30 (3.10), பாரிஸ் கார்னர் – 8. 65 (0.60), கொரட்டூர் –  4.30 (0.30), அம்பத்தூர் (பாலாஜி நகர்) 10.60 (0.10), அயனாவரம் –  10.80 (5.50), வில்லிவாக்கம் –  6.05 (1.0), அண்ணாநகர் மேற்கு –  5.80 (0.70), கோயம்பேடு –  5.90 (0.60).

சேப்பாக்கம் –  4.35 (1.15), நுங்கம்பாக்கம் –  5.40 (0.55), மேற்கு மாம்பலம் –  6.50 (0.50), சைதாப்பேட்டை –  7.60 (0.20), சின்னமலை –  7.10 (2.30), செயின்ட் தாமஸ் மவுண்ட் –  6.50 (1.30), கோட்டூர்புரம் –  3.50 (0.60), மந்தவெளி –  3.25 (1.15), பெசன்ட்நகர் –  5.25 (0.65), பள்ளிக்கரணை –  5. 50 (1.10).

இதே போல் நிலத்தடி நீரில் உள்ள உப்பு தன்மை வெகுவாக குறைந்து உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Chennai Metro Water Board Realese a Ground Water level, Salinity.