தமிழக காவல்துறையில் நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மே மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஆனால் 5 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று 11 மையங்களில் நடைபெற்றது
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், நேரு விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த உடல் தகுதி தேர்வுக்கு மொத்தம் 635 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. அதில் 632 பேர் பங்கேற்றனர்.
முதலில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைத்து மார்பளவு, உயரம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதில் பலர் தோல்வியை தழுவினர். முதல் கட்ட தகுதி தேர்வில் வெற்றி பெற்வர்கள் நேரு விளையாட்டு அரங்கில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர். அதற்கு 7 நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு 8 நிமிடம் வரை கொடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் பொதுப்பிரிவினர் பங்கேற்றனர்.
இன்றும் நாளையும் அதாவது ஆகஸ்ட் 4 மற்றும் 5ஆகிய தேதிகளிலும் தொடர்ந்து உடல் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது என்றும் இந்த இரண்டு நாட்களில் பெண்கள், போலீசில் பணி புரிபவர்கள் உள்பட மற்ற பிரிவினர்கள் பங்கேற்கிறார்கள்.
இணை கமிஷனர் நாகராஜன், துணை கமிஷனர் சவுந்தரராஜன், கூடுதல் துணை கமிஷனர் சியாமளா ஆகியோரது மேற்பார்வையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலும், துணை கமிஷனர் சந்தோஷ் குமார் மேற்பார்வையில் நேரு விளையாட்டு அரங்கிலும் உடல் தகுதி தேர்வு நடைபெற்றன. 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றவர்களில் பல இளைஞர்கள் மைதானத்தில் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary : 632 candidates took Physical exam for Sub-Inspector post in Chennai.