passport1பாஸ்போர்ட் எடுக்க தற்போது பல எளிய வழிமுறைகள் பின்பற்றப்படும் வரும் நிலையில் குறைந்த கட்டணத்தில் பாஸ் போர்ட் பெற விரும்புபவர்கள் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்க சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ‘பொது சேவை மையம்’ தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து தினமும் பலர் வெளிநாடு செல்கின்றனர். இதில் முக்கியமாக தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவர்களின் வசதிக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் முதலில் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து பின்னர் இங்கு சென்று நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை இன்னும் ஒரு சிலருக்கு புரியவில்லை.

இதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில இன்டர்நெட் மையங்கள், ரூ.300 முதல் ஆயிரம் ரூபாய் வரை பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கட்டணம் பெறுகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு இச்சேவையைக் குறைந்த கட்டணத்தில் அளிப்பதற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொது சேவை மையம் தொடங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிதாக பாஸ்போர்ட் பெற நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தினமும் 2 ஆயிரத்து 100-ல் இருந்து 2 ஆயிரத்து 550 ஆக அதிகத்துள்ளது. மேலும், நேர்முகத் தேர்வுக்கான முன் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் 20 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களின் வசதிக்காக பாஸ்போர்ட் தலைமை அலுவலகத்தில் பொது சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பாஸ்போர்ட் பெற ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிப்பதற்கான உதவிகள் செய்து தரப்படும். இதற்காக தமிழக அரசு கேபிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் இப்பணிக்காக நியமிக்கப் பட்டுள்ளனர். பொதுமக்கள் இந்த சேவை மையத்துக்கு வந்து நேர்காணலில் பங்கேற்பதற்கான முன் அனுமதியை பெறலாம்.

இச்சேவையை பெற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.100-ம், பணமாக செலுத்து பவர்களுக்கு ரூ.155-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பாஸ்போர்ட் பெற விரும்பும் பொதுமக்கள் இக குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

English Summary:Chennai Regional Passport Office of the special arrangements for a small fee to get passports