சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையே மூழ்கும்படி கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட போதிலும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான வெயில் கொளுத்தி வருவதால் சென்னை நகரின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் மிக வேகமாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியில் கடந்த 2 மாதத்தில் 1,264 மில்லியன் கன அடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் போது சென்னை நகரின் குடிநீர் ஆதரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி கடல் போன்று காட்சியளித்தன. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால், குடிநீர் தேவை அதிகரித்து, அதன் காரணமாக அனைத்து ஏரிகளின் நீர்மட்டமும் அதிரடியாக குறைந்து உள்ளது.
கடந்த ஜனவரி 21ஆம் தேதி நிலவரப்படி 3 ஆயிரத்து 224 மில்லியன் கன அடியாக இருந்த பூண்டி ஏரியின் நீர்மட்டம் நேற்றைய தினம் 1,960 மில்லியன் கன அடியாக இருந்தது. அதன்படி 2 மாதத்தில் 1,264 மில்லியன் கன அடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
அதேபோல் 598 மில்லியன் கன அடியாக இருந்த சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 296 மில்லியன் கன அடியாகவும், 2 ஆயிரத்து 705 மில்லியன் கன அடியாக இருந்த புழல் ஏரியின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 473 மில்லியன் கன அடியாகவும், 2 ஆயிரத்து 976 மில்லியன் கன அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 552 மில்லியன் கன அடியாகவும் குறைந்துள்ளது.
அதாவது, சோழவரம் ஏரியில் 302 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 232 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 424 மில்லியன் கன அடியும் நீர் மட்டம் குறைந்துள்ளது.
‘அக்னி’ நட்சத்திரம் எனப்படும் ‘கத்திரி’ வெயில் காலம் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருவதால், ‘சென்னை நகரம் குடிநீர் அபாயத்தில் சிக்குமா?’ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘தற்போது ஏரிகளில் உள்ள நீர்மட்டம் அடுத்த 5 மாதங்களுக்கு சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.’ என்று கூறினார்.
English summary-scorching summer – Chennai reservoirs about to dry