சென்னை நகரில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடான நிலையில் கடந்த வாரம் ஓரளவு மழை நின்று பொதுமக்களை நிம்மதிக்குள்ளாக்கியது. ஆனால் நேற்று முன் தினம் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி சென்னையில் உள்ள திருவான்மியூர், பாலவாக்கம், அடையாறு, சாந்தோம், எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், கொளத்தூர், மாதவரம், புழல் உள்பட சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்தது. சென்னையில் மீண்டும் மழை பெய்ததை அடுத்து நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த தீபாவளிக்கு பின்னர் ஓரிரு நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்குரிய அரையாண்டு தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக திகழும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது கணிசமாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக நேற்றைய நிலவரப்படி பூண்டி 12 மில்லிமீட்டர், சோழவரம் 30, செங்குன்றம் 44, செம்பரம்பாக்கம் 17 மற்றும் வீராணம் 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 3,096 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 238, புழல் 885, செம்பரம்பாக்கம் 500, வீராணம் 785 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மொத்த கொள்ளளவில் பூண்டி ஏரியில் 82.98 சதவீதமும், சோழவரம் 67.31 சதவீதமும், செங்குன்றம் 84.61 சதவீதமும், செம்பரம்பாக்கம் 85.76 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக 80 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக போதிய நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நடப்பாண்டுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. அதேபோல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது’ என்று கூறியுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியபோது, “தமிழக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் முக்கியமான 15 அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 4.2 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. இதேபோல் பவானிசாகர் 52.6, அமராவதி 9, பெரியார் 16.8, வைகை 12, பாபநாசம் 70, மணிமுத்தாறு 30.5, பேச்சிப்பாறை 5, பெருஞ்சாணி 8.6, கிருஷ்ணகிரி 1.8, சாத்தனூர் 23.8, சோலையாறு 10, ஆழியாறு 1, திருமூர்த்தி 4 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. இதில் பரம்பிக்குளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் மழை அளவு பதிவாகவில்லை. தொடர்ந்து மழை இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருப்பதால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கரைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினர்.
English summary-Chennai schools & colleges remain closed today