சென்னையில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்பட்டு மக்களின் பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில் இவ்வருடத்திற்கான பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 42-ஆவது சுற்றுலா, தொழில் பொருள்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் பொருள்காட்சி தொடங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 70 நாள்கள் வரையில் பொருட்காட்சி நடைபெறும் என்று சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஜனவரி 12-ஆம் தேதி முதல் பொருள்காட்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் ஒவ்வொரு துறையின் சார்பிலும் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான சாதனை அரங்குகளும் அமைக்கப்படும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் கவரும் வகையில் பொழுதுபோக்குகளுடன் கூடிய அரங்குகள், சறுக்கு விளையாட்டுகள், யானை, கப்பல், தேர் உள்பட பல்வேறு வகையான ராட்டினங்கள், ரப்பர் படகு சவாரி, விடியோ கேம், அனிமேஷன் 3டி அரங்குகள், நிகழாண்டு முதல் சர்க்கஸ் காட்சிகள் ஆகியவை ஒரே இடத்தில் இடம்பெற உள்ளன.
ஒவ்வொரு நாளும் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இந்த பொருட்காட்சி செயல்பட உள்ளன. இதற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி கல்லூரி சார்பில் வரும் மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டு ரூ.5 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.10-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொருள்காட்சி துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தொழில் பொருள்காட்சி நடத்தப்படுகிறது. இதில், அனைத்துத் திட்டங்கள் குறித்த விவரங்களையும் ஒரே இடத்தில் பெற முடியும். இதுபோன்ற காரணங்களால் பொருள்காட்சியை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அரசின் ஒவ்வொரு துறை சார்பிலும் அமைக்கப்படும் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடைகள் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன என்று கூறினார்.
English Summary: Chennai Tourism Exposition Dates Postponed.