கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசியபோது சென்னை ஆர்.கே.நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அரிவித்திருந்தார். அதன்படி தற்போது ஆர்.கே.நகரில் கல்லூரிக்கான புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ.8 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, “முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்பட 53 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, உயர்கல்வித் துறைக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் காரணமாக 2011–ஆம் ஆண்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், தற்போது 42.8 சதவீதத்தை எட்டி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் தற்காலிகமாக 2015-2016 கல்வியாண்டு முதல் செயல்படுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இக்கல்லூரியில் பணியாற்றுவதற்காக 11 ஆசிரியர் மற்றும் 17 ஆசிரியரல்லாத பணியிடங்களை உருவாக்குவதற்காக தொடர் செலவினமாக 77 லட்சத்து 7 ஆயிரத்து 800 ரூபாய், கல்லூரிக்கென மரத்தளவாடங்கள், புத்தகங்கள், கணினிகள் மற்றும் இதர தளவாடங்கள் வாங்குவதற்காக தொடர் செலவினமாக 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் இக்கல்லூரிக்கென புதிய கட்டடம் கட்டுவதற்காக 7 கோடியே 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 8 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary:Chief Minister aside RS.10 crore for New College in R.K.Nagar Chennai.