koyambeduசரஸ்வதி, ஆயுதபூஜை ஆகிய பண்டிகை தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக பொதுமக்களால் நேற்றும், நேற்று முன் தினமும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக தமிழகத்தின் பல நகரங்களில் சிறப்பு சந்தை செயல்பட்ட நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு சந்தையில் ரூ.10 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த சிறப்பு சந்தையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் விற்பனை நடைபெற்றது. அதுமட்டுமல்லாது, பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டுகளிலும் நல்ல வியாபாரம் நடைபெற்றது. மக்கள் அதிகளவில் வருகை தந்ததால் அங்கு கடந்த இரு நாட்களாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க, சாலையோரம் கடை வைப்போர் சாலையை ஆக்கிரமிக்காமல் இருக்க, மார்க்கெட் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆயுத பூஜையின்போது தமிழக அரசியல் சூழல் சரியில்லாமல் இருந்ததால் சொல்லிக் கொள்ளும்படி, அப்போது வியாபாரம் நடைபெறவில்லை என்றும், ஆனால் இந்த ஆண்டு அமோக விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு விற்பனை குறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் வி.ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது: இந்த ஆண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அமோக விற்பனை நடைபெற்றது. பூ மற்றும் பழ மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட பலமடங்கு விற்பனை அதிகமாக இருந்தது. சிறப்பு சந்தையில் கடை வைத்தவர்களும் அதிக அளவில் விற்பனை செய்தனர். இப்பண்டிகை அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் பண்டிகை. அதிக மக்கள் வரத்தால் கடந்த 2 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் கடும் போக்கு வரத்து நெரிசல் இருந்து வந்தது. இந்த ஆண்டு அதிக அளவில் வாழைமரம், வாழைப்பழம், பொரி ஆகியவை விற்பனை ஆகின. அதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.10 கோடிக்கு பூஜை பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary:Ayutapujai products to market sales of Rs 10 crore in Chennai CMBT