metroசென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் இரவுபகலாக சுறுசுறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சுரங்க ரயில் பாதையில் மெட்ரோ ரயில் வரும் 2017ஆம் ஆண்டு இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ஆர்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.ராமநாதன் கூறியதாவது: “மெட்ரோ ரயில் பணி மிகவும் சவாலானது. பூமிக்கு அடியில் கடினமான பாறைகள் இருப்பதால், சுரங்க வழித்தடத்தை அமைப்பது சவாலாக உள்ளது.
எனினும், தொழில்நுட்ப உதவியின் காரணமாக எளிதாக சமாளித்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மெட்ரோ ரயில் போக்குவரத்து முழுவதும் கணினி மயப்பட்டதாகும். மென்பொருள் மூலமாகத்தான் இயங்குகின்றன. எனவே, தண்டவாளம் அமைக்கப்பட்ட பின்பு மெட்ரோ ரயில் குறைந்தது 3 முதல் 4 மாதங்கள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். கோயம்பேடு – எழும்பூர் இடையிலான சுரங்கம் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

எழும்பூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே சுரங்கம் அமைக்கும் பணிகளும் இப்போது தொடங்கியுள்ளன. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் இடையிலான மெட்ரோ ரயில் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. சென்னையில் அடுத்தக்கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான ஆய்வுகளும் முடிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் எதிர்காலத்தில் அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், சாலை போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதும் பெருமளவு குறையும்’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதல்வர் எம்.கே.மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English Summary:Subway Metro train in 2017. Project Director Information.