ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நடந்து வரும் குற்றங்களை தடுக்க மாம்பலம் மற்றும் திருவான்மியூரில் கூடுதலாக ரயில்வே காவல் நிலையங்கள் அமையவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த இரண்டு பகுதிகளிலும் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா காவல்நிலையங்களை திறந்து வைத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை, மாம்பலம் பகுதியில் வியாபார நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டு வருவதாலும், தென் மாவட்டங்களிலிருந்து வரும் விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதாலும், மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போன்று ராஜீவ்காந்தி சாலையில் அதிகளவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் திருவான்மியூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாலும், மேற்படி இரண்டு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மாம்பலம் மற்றும் திருவான்மியூர் ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு ரயில்வே காவல் நிலையங்கள் இன்று முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary: Chief Minister Selvi.J.Jayalaitha inaugurates the New Railway Police Stations in Mambalam and Thiruvanmiyur Stations.