தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர் சங்கத் தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி கூறவும், வாழ்த்துப் பெறவும் நடிகர் சங்க நிர்வாகிகள் அனுமதி கேட்டு இருந்தனர். இதனையடுத்து அவர்களை நேற்று முதல்வர் ஜெயலலிதா சந்திக்க ஒப்புதல் வழங்கி இருந்தார்.
அதன்படி நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர். அப்போது, நடிகர் சங்க தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற அனைத்து உதவிகளையும் செய்த ஜெயலலிதாவுக்கு தங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் கூறினர். நடிகர் சங்கத் தலைவர் நாசர், நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒருவர்பின் ஒருவராக அறிமுகம் செய்து வைத்தார். அனைவரும் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
இந்த சந்திப்பு குறித்து நேற்று நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, அதன் நிர்வாகிகளாக தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், உபதலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்தனர். அவர்களை முதலமைச்சர் மகிழ்வோடு வரவேற்று, அக்கறையோடு சங்கத்தின் நிலையை கேட்டறிந்து கொண்டு, புதிய நிர்வாகத்தை மனதார வாழ்த்தினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் திலகம் திரு.சிவாஅஜி கணேசன், திரு.மேஜர் சுந்தர்ராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை, இந்த புது நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும். இந்த புதுநிர்வாகம் அதை செய்யுமென்ற நம்பிக்கை இருக்கிறது. சங்கத்தின் வளர்ச்சிக்காக அரசின் முழு ஆதரவு இருக்குமென்றும் கூறினார்.
சங்கத்தின் புதுக்கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் வெண்டுகோள் வைக்க புன்சிரிப்போடு முதலமைச்சர் முன்கூட்டியே அந்நாளை தெரிவிக்குமாறும், கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் உறுதி கூறினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-CM Jayalalithaa meets vishal team