veggie-181115
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால் சாலை போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாகவும், சாலைப் போக்குவரத்து குறைந்ததன் காரணமாகவும் சென்னைக்கு வரவேண்டிய காய்கறி லோடுகள் சரியாக வரவில்லை. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை பயங்கரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை நகரில் 50 கூடுதல் காய்கறி விற்பனை மையங்களை தற்காலிகமாக திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தற்போது சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 42 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுடன் தற்காலிகமாக கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் துவங்கப்படும் என்றும் மொத்தமுள்ள 92 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் பொது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் காய்கறிகளான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பீட்ரூட் மற்றும் புடலங்காய் ஆகிய காய்கறிகள் இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

சென்னை நகரில் தற்காலிகமாக துவங்கப்படவுள்ள 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் விவரம் பின்வருமாறு:

துரைப்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் டீயூசிஸ் அங்காடிகள், தாடண்டன் நகர், சாஸ்திரி நகர், விருகம்பாக்கம், சின்மயா நகர், திருநகர் (வடபழனி), மன்னார் முதலியார் தெரு (வடபழனி), பேரூர்-காரப்பாக்கம், கணேஷ் நகர் (கிழக்கு தாம்பரம்), கௌரிவாக்கம் (கிழக்கு தாம்பரம்), சந்தோஷபுரம் (கிழக்கு தாம்பரம்), இராமகிருஷ்ணன் தெரு (மேற்கு தாம்பரம்), வசந்தம் காலனி (வில்லிவாக்கம்), திருமங்கலம் (அண்ணாநகர் மேற்கு), ஏ.கே.சாமி நகர் (அயனாவரம்), பி.பி. கார்டன் (அமைந்தகரை), கிருஷ்ணாபுரம் (அம்பத்தூர்), புரசைவாக்கம், மணலி, எத்ராஜ்சாமி தெரு (எருக்கன்சேரி), முத்தமிழ் நகர் (கொடுங்கையூர்), பஜனைகோயில் தெரு (எர்ணாவூர்), பாரதியார் தெரு (எர்ணாவூர்), பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், அருணாசலேஸ்வரர் தெரு (புது வண்ணாரப்பேட்டை), பூண்டி தங்கம்மாள் தெரு (புது வண்ணாரப்பேட்டை), தண்டையார் நகர், சௌகார்பேட்டை, தண்டையார் பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெரு (தண்டையார் பேட்டை), ஐசிஎப் பேருந்து நிலையம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மேற்கு மாம்பலம், ரங்கைய்யா கார்டன் தெரு (மைலாப்பூர்), கிழக்கு அபிராமபுரம் (மைலாப்பூர்) ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மற்றும் அண்ணா நகர் மேற்கு, அசோக் நகர், ஆர்.கே.மடம் சாலை, இந்திரா நகர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, ராயப்பேட்டை, திருவான்மியூர், ஆற்காடு சாலை, போரூர் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகள்.
English summary-Chief Minister Jayalalitha has ordered to set up fifty new vegetable outlets in Chennai.