ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கும் முன்பாக ஆர்.டி.ஓ. பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புவது வழக்கம். இதையொட்டி இந்த வருடமும் வரும் மே மாதத்திற்குள் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அனைத்து ஆர்.டி.ஓ அதிகாரிகளுக்கு போக்குவரத்து அணையரகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க அவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்றும், சில இடங்களில் பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்படுகிறது.
இதன்படி பள்ளி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் அந்த வாகனத்தை இயக்குவதற்கான தகுதிச்சான்று அளிக்கப்படாது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியபோது, ‘பள்ளி வாகனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் முழுமையாக ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப வேண்டுமென்று கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளோம். அதன்படி, ஆர்டிஓக்கள் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் பள்ளிகளுக்கு சென்றோ அல்லது பொதுவான இடத்துக்கு வாகனங்களை கொண்டு வந்தோ ஆய்வு நடத்துவார்கள்.
ஆய்வின்போது ஏற்கெனவே தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்களும் உடனிருப்பார்கள். ஆய்வின்போது வாகனங்களில் குறைபாடுகள் இருப்பதாக தெரியவந்தால் தகுதிச் சான்று (எப்.சி) அளிக்கப் படமாட்டாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்படும்’ என்று கூறினர்.
English summary : Commissionerate of school transport vehicles in order to complete the review by May