சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக நேற்று வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஒருசில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் செயல்பட தொடங்கிவிட்டது. இந்நிலையில் இன்று வரும் பள்ளி மாணவர்களுக்கு சேதமடைந்த புத்தகங்கள் வழங்குவதோடு வெள்ளத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மழை வெள்ள பாதிப்பு காரணமாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகளில் புனரமைப்பு பணி நடைபெற்ற பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன. இதற்கான வகுப்பறைகள், பெஞ்சு, நாற்காலிகள் சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இன்று பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகின்றன. மழை வெள்ள பாதிப்பை கடந்து அவர்கள் வருவதால் மன உளைச்சலை போக்க போதுமான அறிவுரை, ஆலோசனைகள் வழங்கப்படும். மருத்துவ முகாமும் நடத்தப்படும்.
பாடப்புத்தகங்கள் இல்லாத மாணவர்களுக்கு புது பாடப்புத்தகங்கள், நோட்டுகள், இலவச சீருடைகள் நாளை வழங்கப்படும். இவை அனைத்தும் தயாராக உள்ளது.
வகுப்பறைகளில் பழுதடைந்த நாற்காலி, மேஜை, பெஞ்சுகள் மாற்றப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் முகாம்கள் நடைபெற்றாலும் அங்கு இட வசதிக்கு ஏற்ப பள்ளிகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
English summary-counselling for school students in flood affected areas