Special-Camps-141115-1சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த வரலாறு காணாத கனமழை மற்றும் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் ஆகியவற்றால் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் துணிமணிகள், முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் சேதமடைந்தும் காணப்பட்டது. குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகங்களும், நோட்டுக்களும் வெள்ளத்தில் நனைந்து சேதம் அடைந்தது.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளின் மாணவர்களுக்கு இலவசமாக புதிய நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். அதேபோல் சேதம் அடைந்த அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து பொது மக்கள் வெள்ளத்தில் இழந்த நிலம்-வீட்டு மனைப்பட்டா, கல்வி சான்றிதழ், கியாஸ் இணைப்பு புத்தகம், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம்-வீடு கிரையப்பத்திரம், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவுச்சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள், ஆவணங்களுக்கு கட்டணம் இல்லாமல் நகல் ஆவணங்கள் வழங்கும் முகாம் இன்று முதல் தொடங்குகிறது.

வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இந்த சிறப்புகள் முகாம்கள் இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த முகாம்களில் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இன்று முதல் பொது மக்கள் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று வெள்ளத்தில் இழந்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல் கேட்டு விண்ணப்பங்கள் கொடுக்கலாம். அவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் கட்டணமின்றி நகல் ஆவணங்கள் வழங்கப்படும்.

சென்னையில் 10 தாலுகா அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் வருமாறு:

1. 473, திருவொற்றியூர் நெடுஞ்சாலை (அப்போலோ மருத்துவமனை அருகில்), தண்டையார்பேட்டை.

2. 3, ராஜா முத்தையா சாலை, பெரியமேடு (நேரு ஸ்டேடியம் அருகில்), புரசை வாக்கம்.

3. 3, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் ரெயில்வே ஸ்டேஷன் அருகில், பெரம் பூர்.

4. 25, யுனைடெட் இந்தியா காலனி, முதல் மெயின் ரோடு, அயனாவரம்.

5. 88, மேயர் ராமநாதன் சாலை, சேத்துப்பட்டு.

6. 4, மேற்கு மாடவீதி, கோயம்பேடு, (குறுங்காலீ சுவரர் கோவில் அருகில்).

7. புதிய எண்.1, பழைய எண்.2, பாரதிதாசன் காலனி, கே.கே.நகர்.

8. 370, அண்ணாசாலை, சைதாப்பேட்டை.

9. 28, பசும்பொன் முத்து ராமலிங்கம் சாலை, ராஜா அண்ணா மலைபுரம்.

10. ஐ.ஆர்.டி. வளாகம், 100 அடி சாலை, தரமணி.

இதேபோல் காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் இன்று முதல் 28ஆம்தேதி வரை நகல் ஆவணங்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
English summary-Special Camps are conducted to replace lost documents in floods