மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை ஆகியவை முடிந்து தற்போது அந்த படிப்புகளுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்பட 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி என 6 அரசு கல்லூரிகள் உள்ளன.
இதேபோல 5 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், 3 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 8 தனியார் ஓமியோபதி கல்லூரிகள், 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 21 தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. 6 அரசு கல்லூரிகளில் 336 இடங்கள் மற்றும் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் வரும் 2015 – 2016ஆம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.என்.ஒய்.எஸ், பி.எச்.எம்.எஸ்) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் ஜூலை 24-ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து 5,075 பேர் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மேற்கண்ட பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வை இந்த மாதம் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், “சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி படிப்புகளுக்கு 5,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். இந்த மாதம் இறுதியில் கலந்தாய்வு தொடங்கப்படும்” என்று கூறினார்.
English Summary : Counselling for Siddha and Unani will be conducted bu end of September.