சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் ஆகியோர்களுக்கு இந்த புறநகர் ரயில் பேருதவியாக உள்ளது. புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளில் சீசன் டிக்கெட் வைத்திருப்போர் மற்றும் மொபைல் போனில் டிக்கெட் எடுக்கும் வசதி வைத்திருப்பவர்கள் தாமதமின்றி ரெயில் பயணத்தை தொடர்கின்றனர். ஆனால் தினசரி டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்கள் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீண்ட வரிசையில் நின்று தங்கள் பொன்னான நேரத்தை டிக்கெட் எடுப்பதில் கழிக்கும் நிலை சில பயணிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த குறையை போக்க வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக புதிய நவீன திட்டம் குறித்த நடவடிக்கைகளை தென்னக ரெயில்வே துறை எடுத்து வருகிறது. ஸ்மார்ட் கார்டு திட்டம் ஏற்கனவே அமுலில் இருந்தாலும் அதற்கு பயணிகளிடம் அந்த அளவு வரவேற்பு இல்லை.

இந்நிலையில் தற்போது புதிதாக நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை செலுத்தினால் டிக்கெட் வழங்கும் தானியங்கி எந்திரங்களை நிறுவ தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக நெரிசல் மிகுந்த தாம்பரம், எழும்பூர், மாம்பலம் உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் மட்டும் அமைக்கப்படுகிறது. முதலில் இந்த எந்திரங்களில் முதல் வகுப்பு டிக்கெட் மட்டும் வழங்கப்படும். இந்த எந்திரங்களில் ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்கள், ரூ.5 முதல் ரூ.1000 வரையிலான ரூபாய் நோட்டுக்களை செலுத்தலாம்.

டிக்கெட் எடுக்கும் வழி முறைகள், டிக்கெட்டுக்கான கட்டணத்தை எந்தெந்த நாணயங்கள், நோட்டுக்களாக எந்திரம் ஏற்றுக் கொள்ளும் என்ற விவரம் எந்திரத்தின் திரையில் தெரியும். அடுத்த 60 விநாடிக்குள் டிக்கெட்டுக்கான சரியான கட்டணத்தை செலுத்த வேண்டும். தாமதமானால் டிக்கெட் வராது. செலுத்திய பணம் வெளியே வந்து விடும்.

கவுண்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டுகளை இந்த எந்திரங்கள் வழங்கும். ஒரு நேரத்தில் 4 பேர் பயணம் செய்யத்தக்க இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும், 4 பேருக்கான பிளாட்பாரம் டிக்கெட்டையும் வழங்கும். முதல் வகுப்பு டிக்கெட்டை பொறுத்தவரை ஒருவர் மட்டுமே பயணம் செய்ய டிக்கெட் வழங்கும். இந்த புதிய வசதி அடுத்த மாதம் ரெயில் நிலையங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary : Chennai Railway to introduce automatic ticket machine for electric trains to make an easy way to get tickets.