postalweekஇமெயில், இண்டர்நெட், எஸ்.எம்.எஸ், என செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் தற்போதைய மக்களை ஆக்கிரமித்து உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9 முதல் 15 வரையிலான தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து மாணவர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை அதிகரிக்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

தேசிய அஞ்சல் வார கொண்டாட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு கடிதப் போட்டி அனைத்து அஞ்சல் பிரிவு தலைமையகங்களிலும் அக்டோபர் மாதத்தில் நடக்கவுள்ளது.

இந்தக் கடிதப் போட்டி 1 முதல் 5-ம் வகுப்பு மற்றும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

‘எனது விடுமுறையை எப்படி கழிப்பேன்’, ‘எனது பள்ளியில் ஒரு நாள்’, ‘எனக்கு பிடித்தமான புத்தகம்’ ஆகிய மையக் கருக்களை கொண்டு கடிதங்களை எழுதலாம். எழுதப்படும் கடிதங்கள் மாணவர்களின் தாத்தா பாட்டிகளுக்கு அனுப்பப்படும். எனவே, தாத்தா பாட்டிகளின் முகவரிகளையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு அஞ்சல் பிரிவிலும் தேர்வு செய்யப்படுகிற முதல் 3 பேரின் கடிதங்கள் மாநில அளவிலும் பின்னர் தேசிய அளவிலும் திருத்தலுக்கு எடுத்துக் கொள்ளப்படும். போட்டியில் வெல்பவர்களுக்கு தக்க பரிசுகள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary:Letter-writing contest for students in National Postal Week.