சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 10 நடமாடும் வாகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் சென்று உளவியல் ஆலோசகர்கள் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர்.
10 நடமாடும் உளவியல் ஆலோசனை குழுக்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சென்னை மாவட்டத்தில் மட்டும் 4 நடமாடும் குழுக்களும், திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களுக்கு தலா 2 நடமாடும் குழுக்களும் செயல்பட்டு வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இந்த கவுன்சிலிங் வரும் 18ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில இடங்களில் மாணவர்களுக்கு மொத்தமாகவும், தேவைப்படும் ஒருசில மாணவர்களுக்கு தனியாகவும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் நேற்று மட்டும் 2621 மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. தாகர் சாகிப் தெருவில் உள்ள அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி, ஏழுகிணறில் உள்ள அரசு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, கொடுங்கையூர் அரசு உயர் நிலைப்பள்ளி, பி.வி.காலனி, எம்.கே.பி.நகர் செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, எம்.பி.தேவதாஸ் உயர் நிலைப்பள்ளிகளில் இன்று மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டன.
மாணவர்கள் வெள்ள பாதிப்பு பயத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பவும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, கவலைப்படாமல் படிக்கவும் இந்த கவுன்சிலிங் பெரிதும் உதவும் என்றும் இந்த பணியில் ஈடுபடுத்த 7 வாகனங்கள் புதிதாக வாங்க ரூ.1 கோடியே 1 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
English summary-Counselling session for chennai students