ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் உள்ள தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக சிறப்பு ஸ்டால்கள் அமைப்பது வழக்கம். இதுபோல் இந்த வருடமும் சிறப்பு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டால்களில் இன்று முதல் 15 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி நிறுவன பொருள்காட்சி நிர்வாக அலுவலர் பிரிவு அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 80 கடைகளில் 54 கடைகள் விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டு அக். 14-இல் பட்டாசு கடைகள் உரிமத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 15 முதல் ஏலம் விடப்பட்டது. இதில், 80 கடைகள் தேர்வு செய்யப்பட்டது.
20 அடி நீளமும், 10 அடி அகலமும் என ஒரு கடைக்கு என்று 200 சதுர அடி கணக்கிடப்பட்டுள்ளது. கடையின் உள் உயரம் 13 அடி குறையாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இடையே 10 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு மின் வசதி கொடுக்கப்பட்டு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடைக்கு உரிமை கோரியவர்களிடம் முன் பணமாக தலா ரூ.10,000 வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், மின் கட்டணமாக ரூ.4 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள பணம் வழங்கப்படும்.
கடை வைப்பவர்களுக்கான விதிமுறைகள்:
1. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். கடைக்கு உரிமை கோரியவர்கள் தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது முக்கியமாகும்.
2. கடைக்காரர்கள் பிற பகுதிகளை ஆக்கிரமிக்க கூடாது. கடைக்கும் முன்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் மேஜை போட்டு வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது.
3. ஒவ்வொரு கடையிலும் தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறாக அமையும் எந்த ஒரு விஷயத்தையும் அனுமதிக்கக் கூடாது.
4. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சீனத் தயாரிப்பு பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விதிமுறைகளை மீறி சீனத் தயாரிப்பு பட்டாசுகளை விற்கமாட்டோம் என விற்பனையாளர்களிடம் உறுதிக் கடிதம் வாங்கிய பிறகே கடைக்கான அனுமதியை வழங்கியுள்ளோம். இந்த நிலையில், உரிமம் பெற்ற பிறகு இவற்றை விற்பனை செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
English summary-crackers shop stalls opened in chennai