சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருவதால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி வாகனங்களில் வேகக் கட்டுப்பட்டு கருவி பொருத்த போக்குவரத்து துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் இதன் விபரீதம் புரியாமல் பல வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்தாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (மத்திய சென்னை) ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: சாலை விபத்துகளில் தினசரி ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது அவசியமாகும். அதாவது, 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் போக்குவரத்து வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி (அதிகபட்சம் மணிக்கு 80 கி.மீ) பொருத்தப்பட வேண்டும் என, மத்திய மோட்டார் வாகன விதி 118-இல் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு, சாலைகளில் இயங்கும் வாகனங்களுக்கும் நிகழாண்டு ஏப்ரல் 1-க்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவியை வாகன உரிமையாளர்கள் பொருத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து போக்குவரத்து வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை மார்ச் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் பொருத்த வேண்டும்.
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்படும். புதிய உத்தரவானது, ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்குள் தகுதிச் சான்றுக்கு வரும் லாரி, பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டது போலவே தற்போது நான்கு சக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பட்டு கருவி பொருத்துவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:Credentials only to vehicles equipped with speed control equipment. With effect from April 1.