rationcard19316இதுவரை அனைத்து அரசு தேவைகளுக்கும் ரேஷன் கார்டை அடையாள அட்டையாகவும் பொதுக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய ரேஷன் கார்டை அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி சற்று முன்னர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: “பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று ஆவணமாக குடும்ப அட்டையும் இதுவரை இடம் பெற்று இருந்தது. ஆனால் தற்போது முகவரிக்கான சான்று ஆவணத்தில் இருந்து குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோக துறை கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் குடும்ப அட்டை வினியோகம் செய்யப்படுவது உணவு பொருட்கள் வாங்குவதற்காகதான். அதனை அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான ஆவணமாக பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த ஆணையை இந்திய வெளி விவகாரத்துறை ஏற்று கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் குடும்ப அட்டையை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary: Since April 1, the ration card is not valid for identity card. Central Government Announced.