தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் மே 8-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் பணியிடங்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 -2023-ம் கல்வியாண்டுக்கான பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மே 8-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் பணிபுரியும் பள்ளிகளில் ஓராண்டு முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு நிர்வாக மாறுதல், பணி நிரவல் என எந்த மாறுதல் வகை என்பதை ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னுரிமை பட்டியல் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் மே 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்னுரிமை பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கடைசி நாள் மே 4-ம் தேதியாகும். இறுதி முன்னுரிமை பட்டியல் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் மே 8-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மே 20-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.