திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டபோதும், கிரிவலத்துக்கான தடை இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள தீபமலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
ஆனால், இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்குமா என்பது இதுவரை கேள்விக்குறியாக நீடிக்கிறது. தீபத்திருவிழா தொடங்க இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில்,
கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன், கார்த்திகை தீபத்திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து, கடந்த 4ம் தேதி, சென்னையில் தலைமை செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருடன், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்பி அரவிந்த் ஆகியோர் நேரில் ஆலோசனை நடத்தினர்.அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் கந்தசாமி தனித்தனியே ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக நடைபெறும் தீபத்திருவிழா வழிபாடுகள் எந்தவிதத்திலும் தடைபடாமல் நடத்தவும், திட்டமிட்டபடி கோயிலில் பரணி தீபம், மலை மீது மகா தீபம் ஏற்றவும் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாட வீதியில் 10 நாட்கள் சுவாமி திருவீதியுலா நடத்துவதையும், தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று தேரோட்டத்தை நடத்துவதையும் தவிர்த்து, கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி வீதியுலா நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபத்திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களை அனுமதிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறும் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை தினமும் சராசரியாக 5 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும், பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், வெளியூர்களில் இருந்து பஸ்களை இயக்கினால், லட்சக்கணக்கான பக்தர்கள் மகா தீபத்தன்று திருவண்ணாமலையில் திரண்டுவிடுவார்கள் என்பதால், 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை வெளியூர் போக்குவரத்தை தடை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும், அது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறது. அதன் அடிப்படையில், தமிழக அரசு ஆலோசித்து தீபத்திருவிழா தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது .