dengue fever awareness campசென்னை நகரில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவாமல் இருக்க தேவையான விழிப்புணர்வை சென்னை நகர மக்களுக்கு வழங்குவது குறித்தும், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய முறைகள் குறித்து சென்னை டாக்டர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்க டெங்கு காய்ச்சல் சிறப்பு விழிப்புணர்வு முகாம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தின் 6வது மாடியில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமுக்கு ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் தலைமை தாங்கினார்.

இந்த முகாமில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காப்பாற்றுவது குறித்து டாக்டர்களுக்கு விரிவானவிளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியை சேர்ந்த பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஏற்றாற் போல் கிருமிகள் தாக்கம் ஏற்பட்டு நோய் பரவுகிறது. விரைவில் மழைகாலம் தொடங்க உள்ளது. எனவே கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதை தடுக்கவும், டெங்கு காய்ச்சல் பாதிக்கும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் டாக்டர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

டெங்கு காய்ச்சல் தாக்கியவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதிகள், மருந்து, மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதிக காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல் டாக்டரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் வீடுகளிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேராசிரியர் பாலசுப்பிரமணி, மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ், குழந்தைகள் நல பேராசிரியர் சாந்தி, பேராசிரியர்கள் ஜெயந்தி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

English Summary:Dengue fever awareness camp in Chennai