இமெயில், இண்டர்நெட் என விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் கடிதத்தின் அருமையை இளையதலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்திய அஞ்சல் துறை கடித கண்காட்சியை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதன்மூலம் இளையதலைமுறையினர்களின் எழுதும் கலை ஊக்குவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 2-ஆவது வாரத்தில் இவ்வருடத்திற்கான கடிதக் கண்காட்சி நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: கடிதங்களை பரிமாறிக் கொள்வது என்பது, ஒரு காலத்தில் மிகப்பெரிய பண்பாடாக இருந்தது. ஜவாஹர்லால் நேரு, மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்கள் எழுதிய கடிதங்கள் இன்றளவும் ஆவணங்களாக போற்றப்படுகின்றன.
இந்தச் சூழலில், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, கட் செவி அஞ்சல், முகநூல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளால் கடிதங்களைப் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் அருகி வருகிறது. இந்த நிலையை மாற்றி, பொதுமக்களிடம் கடிதம் எழுதும் கலையை ஊக்குவிக்கும் விகையில், கடிதக் கண்காட்சி சென்னையில் ஜனவரி 2-ஆவது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. கடிதங்களுக்கு என்றுமே மதிப்பு உண்டு. இந்தக் கண்காட்சியில், பொதுமக்கள் பங்கேற்கலாம்.
தங்களின் உறவினருக்கு எழுதியது, அரிய நினைவுகள், பொக்கிஷம் சார்ந்த கடிதங்களையும் இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கலாம். ஒரு மாதம் காலம் வரை நடைபெறும் கண்காட்சியில், தனி நபரை பாதிக்கக்கூடிய வார்த்தைகள் இடம்பெறும் கடிதங்கள், தேர்வுக் குழுவால் நிராகரிக்கப்படும். கடிதங்களை கண்காட்சியில் அனுமதிக்கவும், நிராகரிக்கவும் தேர்வுக் குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு.
கண்காட்சியில் அசல் கடிதங்கள் அல்லது நகலை, “கண்காணிப்பாளர், அஞ்சல் தலை சேகரிப்பு மையம், அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையம், சென்னை-600002′ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 044-28543199, chennaiphil@gmail.com என்ற தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : Details to participate in Postal Exhibition conducted in Chennai.