தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில், இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இந்த மழை மக்களை குளிர்வித்தது. கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
கரூரில் நேற்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டியது. அரைமணி நேரம் பெய்த கனமழையால் பலத்த காற்றும் வீசியது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்காலிகமான சிரமத்திற்கு ஆளான போதும் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.