பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தென்னக ரயில்வே அவ்வபோது சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள நிலையில் வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி திருநாளை முன்னிட்டு 12 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளதாவது, “இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கோவை, ஈரோடு, கரூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவற்றில் முக்கிய ரயில்களில் பயணிகள் கூட்டத்தைப் பொருத்து தேவைக்கேற்ப கூடுதலாக 70 பெட்டிகள் இணைக்க வாய்ப்புள்ளது.
மேலும் சிறப்பு ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களிலும் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது என்ற தடை உத்தரவையும் மீறி பயணிகள் யாரேனும் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”
இவ்வாறு வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில்கள் குறித்த விபரங்கள்:
சென்னை எழும்பூர் – நெல்லை (06747) சிறப்பு ரயில் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 1-ம் தேதி காலை 10.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 2.30 மணிக்கு நெல்லை போய்ச் சேரும்.
நெல்லை – சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் (06749) சிறப்பு ரயில் (திருச்சி, விருத்தாசலம் வழியாக) நெல்லையில் இருந்து நவம்பர் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை வந்து சேரும்.
கோவை – சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06626) கோவையில் இருந்து நவம்பர் 1-ந் தேதி மற்றும் 4-ந் தேதி அதிகாலை 12.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 8.30 மணிக்கு சென்னை வந்துசேரும்.
சென்னை சென்ட்ரல் – கோவை சிறப்பு ரயில் (06625) சென்னையில் இருந்து நவம்பர் 1-ம் தேதி பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு அதேநாளில் இரவு 9 மணிக்கு கோவை போய்ச்சேரும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
English summary-Ticket booking begins for Diwali special trains