Nilavembu-Kudineer-31102015சென்னையில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தம் வந்தவர்கள் ஆகியோர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மா உணவகம்’ சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: வட கிழக்குப் பருவ மழைக் காலங்களில், காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சலை முறையான எலிசா பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய இயலும்.

கடந்த ஜனவரி முதல் இதுநாள் வரை 93 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதத்தை பொருத்தவரை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,522 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 492 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 93 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மக்களுக்கு நலக் கல்வி விழிப்புணர்வும், மாணவர்களுக்கு விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
English summary-Nilavembu Kudineer will be available in amma canteens,Chennai corporation