சென்னை மாநகராட்சியில் மொத்தம் 805 பணியிடங்கள் காலியாக உள்ளதை அடுத்த, அந்த இடங்களுக்கு பணியாளர்களை நிரப்ப மாநகராட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் நாளிதழில் விளம்பரம் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் நிரப்பப்படும் என தெரிகிறது. இதுகுறித்த தீர்மானங்கள் நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் பின்வருமாறு:
மாநகராட்சியின் 26 துறைகளில் 805 காலிப் பணியிடங்கள் உள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்பும்போது வேலைவாய்ப்பு அலுவலக பெயர்ப் பட்டியல் பெறுவது மட்டுமன்றி, 2 நாளிதழ்களில் இதுகுறித்து விளம்பரம் செய்து நிரப்ப, நீதிமன்ற ஆணையைப் பின்பற்றுமாறு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் படிவம், அறிவுறுத்தல்களை மாநகராட்சி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்பது தொடர்பாக 2 நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும். அதன் பின்னர், தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களை அனுப்பியவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட நபர்கள் ஆகியோருக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்படும். மேலும் நேரடி நியமனங்கள் நடைபெறுவதைக் கண்காணிக்க, துணை ஆணையர் (பணிகள்), தலைமைப் பொறியாளர் (கட்டடம்), மேற்பார்வை பொறியாளர் (சிறப்பு திட்டம்), செயற்பொறியாளர் (பாலங்கள்), நகர சுகாதார அலுவலர் அல்லது மாவட்ட குடும்ப நலத்துறை துணை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
English Summary:Do you want to work in Chennai ? Launch Application Form on the website