வடகிழக்கு பருவமழை ஏமாற்றி வருவதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகரின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டி.எம்.சி., ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் சோழவரம் செம்பரம்பாக்கம் பூண்டி ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது.
கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் வழியாகவும் குடிநீர் எடுத்துவரப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவும் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.கிருஷ்ணா நீர் திட்டம் வாயிலாக ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இந்த நீரும் சென்னையின் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது.
தற்போது திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில் மொத்தமாக 1.75 டி.எம்.சி., மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதிகபட்சமாக புழலில் 1.13 டி.எம்.சி., உள்ளது. மற்ற மூன்று ஏரிகளில் சொற்ப அளவிலான நீர் மட்டுமே எஞ்சியுள்ளது. வீராணம் ஏரியில் 1.09 டி.எம்.சி., நீர்இருப்பு உள்ளது. தற்போதுள்ள நீரை வைத்து அதிகபட்சமாக சென்னையின் இரண்டரை மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். ஆந்திர அரசு 1.60 டி.எம்.சி., நீரை மட்டுமே கண்டலேறு அணையில் இருந்து திறந்து நிறுத்திக்கொண்டது.
இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதேநிலை நீடித்தால் அடுத்தாண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.எனவே மாற்று ஏற்பாடுகளை ஆராயவேண்டிய நெருக்கடி குடிநீர் வாரியம் மற்றும் நீர்வளத் துறைக்கு ஏற்பட்டுள்ளது.