இந்திய தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மிகவும் உதவிகரமாக இருப்பது மெட்ரோ ரயில்கள்தான். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மெட்ரோ ரயிலை நவீனமாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் முதல்படியாக டிரைவரே இல்லாத மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இதன் சோதனை ஓட்டம் இன்னும் ஒருசில வாரங்களில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியின் முக்கியப் பகுதிகளான நொய்டா, காஜியாபாத், குர்கான், ஃபரீதாபாத் உள்பட தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் தினமும் ஏறக்குறைய 28 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே இரு கட்டங்களாக மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்று, தற்போது மூன்றாம் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் உயர் தொழில்நுட்பம் மிக்க பெட்டிகளுடன் கூடிய, ஓட்டுநர் இல்லாத ரயில்களையும் இயக்க டிஎம்ஆர்சி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த ரயில்கள் மையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படும்.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்கங்கள், உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் மொத்தம் 6 ரயில் பெட்டிகள் கொண்ட 20 ரயில்கள் தென் கொரியாவில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து கடல் மார்க்கமாக கப்பலில் குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், சாலை மார்க்கமாக டெல்லியில் உள்ள முகுந்த்பூருக்கு பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டிருந்தன. மீதம் உள்ள 61 ரயில்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பிஇஎம்எல்) தயாரிக்கப்பட்டு வருவதாக டிஎம்ஆர்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஓட்டுநர் இல்லாத ரயில்கள் ஏற்கெனவே உள்ள மெட்ரோ ரயில்களில் இருந்து மாறுபட்டதாகும். இதில் பெண்களுக்கான இருக்கைகள் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் உள்ளன. சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இந்த ரயில்களின் ஓட்டுநர் இருக்கைகள் நீக்கப்பட உள்ளதாகவும், இதனால், பயணிகள் ரயில் தண்டவாளத்தின் ஓடுபாதையை பயணிகள் பார்வையிட முடியும். மேலும், ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும் இருக்கைகள் வெவ்வேறான வண்ணங்களில் தீட்டப்பட்டிருக்கும். இடஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைகளுக்கும் பிரத்யேக வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.
“ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலில் ஓட்டுநருக்கான பெட்டி அகற்றப்படும் என்பதால், ரயில் பயணிகளை கூடுதலாக ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும். மேலும், இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் நவீன மின்சாதன தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்படவுள்ளன. இதனால், 10 சதவீதம் மின்சாரம் சேமிக்கப்படும். ரயில் பாதைகளில் நவீன தொழில்நுட்ப சமிக்ஞை வசதிகள் அமைய உள்ளதால், ரயில்களுக்கு இடையேயான போக்குவரத்து நேர இடைவெளியும் குறையும்’ என்று டிஎம்ஆர்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் டிஎம்ஆர்சி மேலாண்மை இயக்குநர் மங்கு சிங் இதுகுறித்து கூறுகையில், “ஜூலை 16ஆம் தேதிக்குள் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கும் என நம்புகிறோம்’ என்று கூறினார். இந்த ரயில் சேவை இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: Driver-less Metro train trial run soon in Delhi.