சமீபத்தில் தமிழக அரசு கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியது. ஆனால் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய தற்போது பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்து உள்ளதால், இந்த பணி முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், “சென்னை – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை – புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலை அமைக்க கடந்த 1994-ல் மத்திய அரசு வழங்கிய சுற்றுச் சூழல் அனுமதியில் 17.5 மீட்டர் அகலத்தில் மட்டுமே சாலை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இன்றி சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
எனவே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வரும் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். 1994-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு முரணாக சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை சீரமைத்து, பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘கிழக்கு கடற்கரை சாலையின் நடுவில் தடுப்புகள் இல்லாததால் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதைத் தடுக்க வேண்டும் என்றால் சாலையை விரிவாக்கம் செய்தாக வேண்டும். அதற்கு மாநில சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ஏற்கெனவே சாலை அமைக்கப்பட்டபோது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த சாலையில் வேறு எந்த பணிகள் மேற்கொண்டாலும் எங்களிடம்தான் அனுமதி பெற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனால் இந்த சாலை விரிவாக்கப் பணிக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட அமர்வின் உறுப்பினர்கள், ‘‘கிழக்கு கடற்கரை சாலையில் குடுமியான்தோப்பு – மாமல்லபுரம் இடையிலான பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அடுத்த விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். மனு மீதான அடுத்த விசாரணை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
English Summary:ECR near Chennai to Expand the Work of Green Tribunal for on injunction.