10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என கல்வியாளர்களும் பேராசிரியர்களுமான பேராசிரியர் ப.சிவகுமார், பேராசிரியர் கல்விமணி, பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மதிப்பெண்ணை அள்ளிக் குவித்த போதிலும், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நமது மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அறிதல் சார்ந்த கேள்விகளுக்கு விடை எழுதும் திறன் பெற்றிருக்கவில்லை என்பதுதான். பல்வேறு அடிப்படைப் பாடங்களில் நமது மாணவர்கள் பலவீனமாக உள்ளனர். மாணவர்களின் பலவீனத்திற்கு முக்கிய காரணம் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்பு பாடங்களையும் மாணவர்களுக்கு பல பள்ளிகள் சொல்லி கொடுப்பதில்லை.
பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டையும் நன்றாகப் படித்துப் புரிந்துகொண்டவர்கள் மட்டுமே மேற்படிப்புகளில் ஜொலிக்க முடியும். ஆனால், பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களைச் சொல்லித் தராமல், 2 ஆண்டுகளும் பிளஸ் 2 பாடங்களை மட்டுமே சொல்லித் தருகின்றனர். பிளஸ் 1 வகுப்பு படிக்காமல் பிளஸ் 2 மட்டும் படிக்கும் மாணவர்களால் அடிப்படை விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
எனவே பிளஸ் 2 வகுப்புக்கு மட்டுமல்லாது, பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அப்போதுதான், அந்தப் பாடங்களும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். மாணவர்களும் உயர் கல்வியில் சிறந்து விளங்குவர். இவ்வாறு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இவர்களுடைய கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary: Educationist requests the Government to make +1 exams as Common Board Exams like SSLC and +2.