தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் திடீரென மரணம் அடைந்துவிட்டார். எனவே தற்போது மூன்று தொதிகள் காலியாக உள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் நடைபெறும் நாள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் செலவு செய்துள்ள ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை ஜூன் மாதம் 19-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி விடும்.
எனவே தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களும் குறிப்பிட்ட தேதிக்குள் செலவு கணக்குகளை தாக்கல் செய்து விட வேண்டும். இதற்காக ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் செலவு ரூ.210 கோடி ஆகும். விழிப்புணர்வு பிரசாரத்திற்காக ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. சீனிவேல் மரணம் அடைந்துள்ளதால் அங்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும். தற்போது அந்த தொகுதி காலியாக உள்ளது பற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவெடுத்து அறிவிக்கும்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது தமிழகம் முழுவதும் பறக்கும்படையினர் நடத்திய சோதனையின்போது ரூ.105.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதில் ரூ.47.4 கோடி உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதால் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள பணம் அரசு கருவூலத்தில் உள்ளது. இந்த பணத்துக்கு உரிமை கோருவோர் தேவையான ஆவணங்கள் மற்றும் கணக்குகளை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
தேர்தலின்போது வாக்குப்பதிவு என்ன காரணத்தினால் குறைந்தது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் வாரியாக ஆய்வு செய்து அதற்கான காரணத்தை கண்டறிவோம். எதிர்காலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்கு இந்த ஆய்வு உறுதுணையாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary: Election of three Constituencies on the same day? Rajesh lakkani Information.