பாராளுமன்றத்தின் மாநிலங்களவையின் 57 உறுப்பினர்கள் பதவிக்கு ஜூன் 11-ல் தேர்தல் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் தமிழகத்திலும் 6 பதவிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் உள்ள 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி முடிவடைய உள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை மத்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் திரேந்தர் ஓஜா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, வரும் மே 24-ல் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பின் மனு தாக்கல் செய்யலாம். இதற்கான கடைசி தேதி மே 31 எனவும், இதை பரிசீலனை செய்யும் நாள் ஜூன் 1 என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதியாக ஜூன் 3 குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 11 ஆம் தேதி காலை 9.00 முதல் மாலை 4.00 மணி வரை தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த ஒரு மணி நேரத்தில் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் தமிழகத்திலும் 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவி வரும் ஜுன் 29-ல் முடிவடைய உள்ளன. இவர்களில் அதிமுகவை சேர்ந்த நவநீதி கிருஷ்ணன், முன்னாள் பத்திரிகையாளரான ஏ.டபிள்யூ.ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஆந்திரபிரதேசம் 4 பேர், தெலுங்கானா 2 பேர், சத்தீஸ்கர் 2 பேர், மபி 3 பேர், கர்நாடகா 4 பேர், ஒடிஷா 3 பேர், மகராஷ்ட்ரா 6 பேர், பஞ்சாப் 2 பேர், ராஜஸ்தான் 4 பேர், உபி 11 பேர், உத்தராகண்ட் ஒருவர், பிஹார் 5 பேர், ஜார்கண்ட் மற்றும் ஹரியானா தலா 2 பேர் என மற்ற மாநிலங்களின் உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 57 உறுப்பினர்களில் நாடாளுமன்ற விவாகரத்துறையின் மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, மத்திய வர்த்தக்கதுறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவாகரத்துறையின் மத்திய இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Elections for 57 Rajya Sabha seats on June 11.